(7) நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
(8) அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
(9) நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
(10) அதில் அவர்கள்; "(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசத்தமானவன்" என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். "எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே" என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும்.
(11) நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைதக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
(12) மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்ககாதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
(13) (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
(14) நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.