(26) நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
(27) ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.
(28) (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி; "நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்" என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்" நீங்கள் எங்களை வணங்கவேயில்லை" என்று கூறிவிடும்.
(29) "நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்" (என்றும் அவை கூறும்).
(30) அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
(31) "உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள்; "அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?" என்று நீர் கேட்பீராக.
(32) உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்ள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
(33) பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.