(72) அதற்கு அவர் கூறினார்; "ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!"
(73) (அதற்கு) அவர்கள், "அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.
(74) (இது கேட்டு) இப்றாஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
(75) நிச்சயமாக இப்றாஹீமை சகிப்புத் தன்மை உடையவராகவும், (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.
(76) "இப்றாஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.
(77) நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் "இது நெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார்.
(78) அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.
(79) (அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.
(80) அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார்.
(81) (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"