(89) "என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
(90) "ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்" (என்று கூறினார்).
(91) (அதற்கு) அவர்கள் "ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லாலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்" என்று கூறினார்கள்.
(92) (அதற்கு) அவர் கூறினார்; "(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.
(93) "என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கோண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன் இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" (என்றும் கூறினார்).
(94) (தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
(95) அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்தலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்; ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!
(96) நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.
(97) (அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.