(46) அ(தற்கு இறை)வன் கூறினான்; "நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்."
(47) "என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
(48) "நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக் இன்னும் சிலமக்களுக்கு நாம் சகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்" என்று கூறப்பட்டது.
(49) (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
(50) ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
(51) "என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)
(52) "என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).
(53) (அதற்கு) அவர்கள்; "ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்" என்று (பதில்) கூறினார்.