(32) "இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
(33) அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
(34) "அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."
(35) "மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான்.
(36) "என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான்.
(37) "நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;"
(38) "குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்" என்று அல்லாஹ் கூறினான்.
(39) (அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
(40) "அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர" என்று கூறினான்.
(41) (அதற்கு இறைவன் "அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
(42) "நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர" என்று கூறினான்.
(43) நிச்சயமாக (உன்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
(44) அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.
(45) நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.
(46) (அவர்களை நோக்கி) "சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்).
(47) மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
(48) அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
(49) (நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்."
(50) "(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்" (என்றும் சொல்லும்).
(51) இன்னும், இப்றாஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!