(52) அவர்கள் அவரிடம் வந்து, "உங்களுக்குச் சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!" என்று சொன்ன போது அவர், "நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்" என்று கூறினார்.
(53) அதற்கு அவர்கள், "பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்" என்று கூறினார்கள்.
(54) அதற்கவர், "என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?" எனக் கேட்டார்.
(55) அதற்கவர்கள், "மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!" என்று கூறினார்கள்.
(56) "வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசைக் கொள்வர்" என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
(57) "(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?" என்று (இப்றாஹீம்) கேட்டார்.
(58) அதற்கவர்கள், "குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
(59) "லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
(60) ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்" என்று (வானவர்கள்) கூறினார்கள்.
(61) (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
(62) (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்" என்று (லூத்) சொன்னார்,
(63) (அதற்கு அவர்கள்,) "அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
(64) (உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
(65) ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
(66) மேலும், 'இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்'.
(67) (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
(68) (லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;"
(69) "அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார்.
(70) அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.