(16) வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
(17) விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
(18) திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
(19) பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம்.
(20) நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
(21) ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
(22) இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
(23) நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
(24) உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
(25) நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
(26) ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
(27) (அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
(28) (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
(29) அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
(30) அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
(31) இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.