(45) "நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்" என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
(46) உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், "எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்" என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
(47) எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
(48) இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
(49) அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.
(50) இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?
(51) இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
(52) அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்ட போது
(53) அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
(54) (அதற்கு) அவர், "நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையவரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினர்.
(55) (அதற்கு) அவர்கள் "நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?" என்று கேட்டார்கள்.
(56) "அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்" என்று (இப்ராஹீம்) கூறினார்.
(57) "இன்னும்; நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!" (என்றும் கூறினார்.)