الأنبياء Al-Anbiyaa
(1) மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
(2) அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.
(3) அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?" என்று கூறிக்கொள்கின்றனர்.
(4) "என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்" என்று அவர் கூறினார்.
(5) அப்படியல்ல! "இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர்.
(6) இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா?
(7) (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே "(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்" (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
(8) அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.
(9) பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
(10) உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?