(91) இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
(92) நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.
(93) (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.
(94) எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
(95) நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
(96) யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
(97) (இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்;) "எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்" (என்று கூறுவார்கள்).
(98) நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)
(99) இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.
(100) அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.
(101) நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.