(105) "என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்" (என்று கூறப்படும்)
(106) "எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்" என்று அவர்கள் கூறுவார்கள்.
(107) "எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!" (என்றும் கூறுவர்.)
(108) (அதற்கவன்) "அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!" என்று கூறுவான்.
(109) நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் "எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
(110) அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.
(111) நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!"
(112) "ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?" என்று கேட்பான்.
(113) "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!" என்று அவர்கள் கூறுவார்கள்.
(114) "ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!" என்று (இறைவன்) கூறுவான்.
(115) "நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (என்றும் இறைவன் கேட்பான்.)
(116) ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!
(117) மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
(118) இன்னும், "என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்" என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!