(60) இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
(61) இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
(62) நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
(63) ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
(64) (இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
(65) "இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
(66) என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
(67) ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).
(68) (குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?
(69) அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?
(70) அல்லது, "அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
(71) இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
(72) அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.
(73) மேலும், நிச்சயமாக நீர் அவர்களை ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
(74) இன்னும் எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்) வழியை விட்டு விலகியவர் ஆவார்.