المؤمنون Al-Muminoon
(1) ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
(2) அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
(3) இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
(4) ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
(5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
(6) ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
(7) ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
(8) இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
(9) மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(10) இத்தகையோர் தாம் (சவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
(11) இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
(12) நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
(13) பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.
(14) பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
(15) பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள்.
(16) பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.
(17) அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுது பராமுகமாக இருக்கவில்லை.