(24) இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் "அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்" என்று கூறியதைத் தவிர வேறில்லை ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
(25) மேலும் (இப்றாஹீம்) சொன்னார்; "உலக வாழ்ககையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.'
(26) (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்றாஹீம்); "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்" என்று கூறினார்.
(27) மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
(28) மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; "நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
(29) நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிராயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்" என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்; "நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீருhக" என்பது தவிர வேறு எதுவுமில்லை.
(30) அப்போது அவர்; "என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.