(53) இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.
(54) அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
(55) அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) "நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவான்.
(56) ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
(57) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
(58) எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும் சவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
(59) (ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
(60) அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(61) மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?
(62) "அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்."
(63) இன்னும், அவர்களிடம்; "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில்; "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.