(46) இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக.
(47) இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
(48) அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
(49) அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
(50) "அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; "அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(51) அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.
(52) "எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்" என்று (நபியே!) நீர் கூறும்.