(43) பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவுட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.
(44) "ஒரு பிடி புல் (கற்றையை) உம் கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்" (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
(45) (நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
(46) நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).
(47) நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.
(48) இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
(49) இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.
(50) 'அத்னு' என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.
(51) அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
(52) அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.
(53) "கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
(54) "நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
(55) இது (நல்லோருக்காக) ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
(56) (அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.
(57) இது (தீயோர்களுக்காக) ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.
(58) இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.
(59) (நரகவாதிகளின் தலைவர்களிடம்;) "இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்ப்பவர்கள்" (என்று கூறப்படும்).
(60) அதற்கு அவர்கள்; "அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!" என்று கூறுவர்.
(61) "எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!" என்று அவர்கள் கூறுவர்.