(84) (அதற்கு இறைவன்;) "அது உண்மை உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.
(85) "நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்" (என்றான்)
(86) (நபியே!) நீர் கூறும்; ("இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
(87) "இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை."
(88) "நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொளவீர்கள்."
الزمر Az-Zumar
(1) (யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
(2) (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.
(3) அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், "அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
(4) அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பிவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
(5) அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிடட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னப்பவன்.