(62) இன்னும், அவர்கள்; "நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
(63) "நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விடடனவா?" என்று கூறுவர்.
(64) நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.
(65) (நபியே!) நீர் கூறுவீராக "நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாளபவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.
(66) "(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்."
(67) (நபியே?) கூறுவீராக "(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.
(68) "நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.
(69) "மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
(70) "நிச்சயமாக நாம் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை.
(71) (நபியே! நினைவு கூர்வீராக!) "நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்;
(72) "நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்" (எனக் கூறியதும்);
(73) அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.
(74) இப்லீஸைத் தவிர அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
(75) "இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?" என்று (அல்லாஹ்) கேட்டான்.
(76) "நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்" என்று (இப்லீஸ்) கூறினான்.
(77) (அப்போது இறைவன்) "இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்" எனக் கூறினான்.
(78) "இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்" (எனவும் இறைவன் கூறினான்).
(79) "இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக" என்று அவன் கேட்டான்.
(80) "நிச்சயமாக நீ அவகாசம் சொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே" என (அல்லாஹ்) கூறினான்.
(81) "குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்" (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்.
(82) அப்பொழுது "உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்" என்று (இப்லீஸ்) கூறினான்.
(83) "(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர" (என்றான்).