(23) ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
(24) அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்; "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
(25) அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
(26) அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
(27) அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.
(28) அவர்கள் நிராசையான பின்னர் மறையை இறக்கி வைப்பவன் அவனே மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
(29) வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் கால்நடைகள் (முதலியவற்றைப்) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.
(30) அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(31) இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.