(32) இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
(33) அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(34) அல்லது அவர்கள் சம்பாதித்த காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.
(35) அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.
(36) ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.
(37) அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
(38) இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
(39) அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.
(40) இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
(41) எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.
(42) ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
(43) ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
(44) "இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?" என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.