(16) எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
(17) அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?
(18) அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர் ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(19) அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
(20) எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
(21) அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
(22) (அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.