(61) நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
(62) அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விடடும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
(63) இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது "மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்" என்று கூறினார்.
(64) நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
(65) ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செயதார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.
(66) தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?
(67) பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.
(68) "என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்).
(69) இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.
(70) நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
(71) பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன் இன்னும், "நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!" (என அவர்களிடம் சொல்லப்படும்.)
(72) "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.
(73) "உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்" (எனக் கூறப்படும்).