(74) நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
(75) அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.
(76) எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.
(77) மேலும், அவர்கள் (நரகத்தில்) "யா மாலிக்" உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு அவர் "நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே" என்று கூறுவார்.
(78) நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).
(79) அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா? ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான்.
(80) அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்த கூடிப் பேசவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்களை (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
(81) (நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"
(82) வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசத்தமானவன்.
(83) ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்களை (வீண் விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில் கழிக்கவும் (நபியே!) நீர் விட்டு விடும்.
(84) அன்றியும், அவனே வானத்தின் நாயனும் பூமியின் நாயனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
(85) அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆடசி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(86) அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசவர்).
(87) மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
(88) "என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்" என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).
(89) ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து "ஸலாமுன்" என்று கூறிவிடும்; (உண்மைமை பின்னர்) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.