(48) ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டி ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.
(49) மேலும், அவர்கள்; "சூனியக்காரரேச (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யவும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்" என்று கூறினார்கள்.
(50) எனினும், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டார்கள்.
(51) மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்; "என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?
(52) "அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா?
(53) "(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா?"
(54) (இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.
(55) பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.
(56) இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்.
(57) இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.
(58) மேலும்; "எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.
(59) அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
(60) நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.