الدخان Ad-Dukhaan
(1) ஹா, மீம்.
(2) தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
(3) நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
(4) அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
(5) அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
(6) (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
(7) நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
(8) அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
(9) ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
(10) ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
(11) (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; "இது நோவினை செய்யும் வேதனையாகும்."
(12) "எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்" (எனக் கூறுவர்).
(13) நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
(14) அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.
(15) நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
(16) ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
(17) அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
(18) அவர் (கூறினார்;) "என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.