(40) நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
(41) ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(42) (எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
(43) நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
(44) பாவிகளுக்குரிய உணவு
(45) அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
(46) வெந்நீர் கொதிப்பதைப் போல்.
(47) "அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
(48) "பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
(49) "நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
(50) "நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்" (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
(51) பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
(52) சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
(53) ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
(54) இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
(55) அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
(56) முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
(57) (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும்.
(58) அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
(59) ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.