(20) இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்; "(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?" என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதேதா அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.
(21) (ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
(22) (போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடுவும் முனைவீர்களோ?
(23) இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.
(24) மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
(25) நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.
(26) இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், "நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்" என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.
(27) ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,
(28) இது ஏனெனில்; நிச்சயமாக இவர்கள் அல்லஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.
(29) அல்லது எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா?