(32) இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
(33) அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
(34) நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
(35) முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்;. அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்;. அவனுடைய பாதையில் போர் புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
(36) நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.