(6) முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
(7) மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, "நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(8) முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(9) ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.