(65) வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.
(66) இன்னும்; அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையேயாகும்.
(67) தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
(68) "வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்; ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.
(69) முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(70) நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்;. எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைக் கொலை செய்தும் வந்தார்கள்.