(32) அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
(33) அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
(34) ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
(35) அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
(36) அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
(37) அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
(38) அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
(39) அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
(40) அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
(41) அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
(42) அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
(43) அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
(44) வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
(45) ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
(46) அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(47) அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
(48) எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
(49) இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!