الأنفال Al-Anfaal
(1) போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
(2) உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
(3) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
(4) இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
(5) (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
(6) அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).
(7) (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
(8) மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).