(70) நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக "உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
(71) (நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(72) நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும் எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
(73) நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.
(74) எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்-அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
(75) இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மாhக்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே. ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.