(53) "ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
(54) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
(55) நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
(56) (நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.
(57) எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
(58) (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
(59) நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.
(60) அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
(61) அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.