(23) அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார்.
(24) ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
(25) (யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) "உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?" என்று கேட்டாள்.
(26) (இதை மறுத்து யூஸீஃப்;) "இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்" என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடம்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்; "இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
(27) "ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்."
(28) (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
(29) (என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார்.
(30) அப்பட்டினத்தில் சில பெண்கள்; "அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்" என்று பேசிக் கொண்டார்கள்.