(96) பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; "நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?" என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
(97) (அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.
(98) நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
(99) (பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் குறினார்.
(100) இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார்.
(101) "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!' (என்று அவர் பிரார்த்தித்தார்.)
(102) (நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
(103) ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.