(5) "என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
(6) இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன்மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்."
(7) நிச்சயமாக யுஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
(8) (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்; "யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
(9) யூஸுஃபை' கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள் (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்" என்றும் கூறியபொழுது,
(10) அவர்களில் ஒருவர்; "நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார்.
(11) (பிறகு தம் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
(12) "நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்று கூறினார்கள்.
(13) (அதற்கு யஃகூப்,) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.
(14) (அதற்கு) அவர்கள், "நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்" என்று கூறினார்கள்.