(64) அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" என்று கூறிவிட்டார்.
(65) அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், "எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்" என்று கூறினார்கள்.
(66) அதற்கு யஃகூப் "உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்" என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் "நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்" என்று கூறினார்.
(67) (பின்னும்) அவர், "என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெள; வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!" என்று கூறினார்.
(68) (மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை நாம் அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
(69) (பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து "நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யூஸுஃப்) அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்" என்று (இரகசியமாகக்) கூறினார்.