(216) போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
(217) (நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."
(218) நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
(219) (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான்.