(203) குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது). அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
(204) (நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
(205) அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்;. கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
(206) "அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
(207) இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
(208) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
(209) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்;, பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(210) அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும்.