(6) நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
(7) அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
(8) இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
(9) (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
(10) அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
(11) "பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள்.
(12) நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
(13) (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
(14) இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள்.
(15) அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
(16) இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர்.