(120) (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
(121) யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
(122) (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்;. இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
(123) இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
(124) (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; "என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
(125) (இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
(126) (இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; "இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக" என்று கூறினார்;. அதற்கு இறைவன் கூறினான்; "(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்" பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே."