(39) போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
(40) இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.
(41) அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
(42) (நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப் பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
(43) (இவ்வாறே) இப்றாஹீமுடைய சமூத்ததினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்வே முற்பட்டார்கள்).
(44) (இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்) இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்வே முற்பட்டனர் எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!)
(45) அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).
(46) அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குரடாகவில்லை எனினும், நெஞ்சக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.