(47) (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
(48) அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.
(49) "மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவனாகவே இருக்கின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(50) "எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
(51) "ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களை தோற்கடிக்க முயல்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!"
(52) (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(53) ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.
(54) (ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகன்கின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன மேலும்; திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
(55) நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.