(56) அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சவனபதிகளில் இருப்பார்கள்.
(57) (ஆனால்) எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான் இழிவு மிக்க வேதனை உண்டு.
(58) இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
(59) நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; மேலும்; நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க பொறுமையுடையவன்.
(60) அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.
(61) அது(ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகின்றான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(62) இது (ஏனெனில்); நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்) மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
(63) நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
(64) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.