(52) (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
(53) "நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?" என்றும் கேட்டான்.
(54) (அவ்வாறு கூறியவனை) "நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?" என்றும் கூறுவார்.
(55) அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
(56) (அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
(57) "என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
(58) "(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?
(59) "(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்று கூறுவார்.
(60) நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
(61) எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
(62) அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா?
(63) நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
(64) மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
(65) அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
(66) நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
(67) பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
(68) அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
(69) நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
(70) ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள்.
(71) இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
(72) மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
(73) பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
(74) அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.
(75) அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
(76) ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.