(77) மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
(78) மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
(79) "ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
(80) இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
(81) நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
(82) பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
(83) நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம்.
(84) அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
(85) அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
(86) "அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"
(87) "அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.)
(88) பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
(89) "நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார்.
(90) எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
(91) அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார்.
(92) "உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?" (என்றும் கேட்டார்.)
(93) பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
(94) (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
(95) அவர் கூறினார்! "நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?"
(96) "உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்."
(97) அவர்கள் கூறினார்கள்; "இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்."
(98) (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
(99) மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்."
(100) "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்).
(101) எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
(102) பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."