(32) எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
(33) அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.
(34) அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
(35) அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.
(36) அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர் மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.
(37) அன்றியும், எவரை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ, அவரை வழி கெடுப்பவர் எவருமில்லை; அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிதீர்ப்பவனாகவும் இல்லையா?
(38) வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; "அல்லாஹ் தான்!" என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக "அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" (நபியே!) மேலும் நீர் கூறுவீராக "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்."
(39) "என்னுடைய சமூகத்தாரே! உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(40) "இழிவு படுத்தும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது?" (என்பதை அறிவீர்கள்).